30 June 2016

பெண்டாட்டியைத் தேடிக்கலாம் ,நகையை :)

 தம்பதிகளுக்கு  'அப் அன் டௌன் ' டிக்கெட் வேண்டாமாம் :)               
           ''நிலவுக்குக் கூட்டிப் போகும் திட்டம்  எதுவும் இருக்கான்னு ஆர்வமா கேட்கிறீங்களே ,போகப் போறீங்களா ?''
            ''பெண்டாட்டியோட போய் ,நான் மட்டும் திரும்பி வரலாம்னு இருக்கேன் !''

புத்திசாலிப் பசங்கதான் :)            
              ''கேட்ட கேள்விக்கு பசங்க யாரும் பதில் சொல்லாததால் வாத்தியார் நொந்து போய்விட்டாரா ,அப்படி என்ன கேட்டார் ?''
               ''முட்டாளோட கேள்விக்கெல்லாம்  பதில் சொல்லக் கூடாது ...புரிஞ்சுதான்னு கேட்டார்!''

நல்ல பிக் அப்தான் :)
           ''கூப்பிட்ட மறு நிமிஷமே கால் டாக்ஸிக்காரன்  வாசல்லே வந்து நிற்கிறான்னா' நல்ல பிக் அப் 'தானே ?இதுக்கு ஏன் வருத்தப்படுறீங்க ?''
         ''என் பொண்ணையும்  பிக் அப் பண்ணிக்கிட்டு ஓடிட்டானே  !''

பெண்டாட்டியைத் தேடிக்கலாம் ,நகையை :)
          ''இன்ஸ்பெக்டர் சார் ,100 பவுன் நகையோட என் பெண்டாட்டி காணாமப் போயிட்டா !''
           ''சரி நான் என்ன செய்யணும் ?''
          ''எப்படியாவது நகையை மட்டும் கண்டுபிடிச்சுக் கொடுங்க போதும் !''

பெண்கள் நிறைய அழுதால் தாய்ப்பால் குறையுமோ ?
பெண்களின் கண்ணீருக்கும் ,தாய்ப்பால் சுரப்புக்கும் காரணம் ...
ஒரே ஹார்மோன்தான்  என்பதை நம்ப முடியவில்லை !
கணவன் விசயத்தில் தாராளமாகவும் 
குழந்தை விசயத்தில் குறைவாகவும் உற்பத்தி ஆகிறதே !

29 June 2016

ஐஸ்வர்யாவை அறிமுகம் செய்த சங்கரை தெரியும் ,லங்கரைத் தெரிஞ்சுக்கலாமே !

 இது ஜோக்கில்லே ,உண்மையும் கூட  :)            
                   ''இனி மேல்  அதிர்ச்சியான விஷயங்களை  உங்க கணவரிடம் சொல்லக் கூடாது ,சரியா ?''
               ''நீங்க அவருக்கு போட்ட ஒரு ஊசியின் விலையே ஐம்பதாயிரம் ரூபாய் என்பதைக் கூடவா  ,டாக்டர் ?''

ஐஸ்வர்யாவை அறிமுகம் செய்த சங்கரை தெரியும் ,லங்கரைத் தெரிஞ்சுக்கலாமே !
வட இந்திய டூர் - பாகம் 2
    முந்தைய பதிவில் வாகா பார்டர் சென்று பார்த்தோம் ,அடுத்ததா நாம செல்ல இருப்பது அதே பஞ்சாப்பில் இருக்கும் பொற்கோவிலுக்கு ! .
சீக்கியவரின் புனித தலமான அங்கே எல்லாரையும் அனுமதிப்பார்களா என்ற கேள்விக்கு கிடைத்த பதில் ...சாதி மதம் ,ஏழைப் பணக்காரன் என்று எந்த  பேதமின்றி அனைவருக்கும் அனுமதி உண்டு என்றதால் ...இதோ இந்த முன் வாசல் வழியாக உள்ளே நுழைக்கிறோம் ...
உள்ளே நுழைந்ததும் கண்ணைப் பறிக்கும் தகதக தங்க நிறத்தில் கண்ணில் படுகிறது பொற்கோவில் ...
தெப்பக் குளத்தின் நடுவே கோவிலில் ஒரு பக்கம் மட்டுமே வாசல் .இரண்டு வரிசையாக மக்கள் ...ஒரு வரிசை மட்டும் வேகமாய் உள்ளே போய்க் கொண்டு இருந்ததால் அந்த வரிசையில் நான் நுழைந்தேன் ...
அங்கிருந்த தாடி வளர்த்து இடுப்பில் குர்பான் கத்தியுடன்இருந்த சீக்கிய பக்தர் ,என்னை அடுத்த வரிசைக்கு போகச் சொன்னார் ..காரணம் ,நான் நின்றது சீக்கியர்களுக்கு மட்டுமே உண்டான வரிசையாம் ...ஜாதி மத பேதம் இல்லாத இடத்தில் இப்படியுமா என்று பட்டது ..நம் கோவில் கர்ப்பக்கிரகத்தில் நுழைய வேறு மதத்தவர்களுக்கு அனுமதியே இல்லையே ..அதுக்கு இது பரவாயில்லை என்று மனதைத் தேற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தேன்...மூன்று மாடி அமைப்புடைய அந்த கோவிலில்  சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம் ...ஒரு சிலர் நடக்கக்கூட விடாமல் தரையை சுத்தம் செய்வதில் குறியாய் இருந்தார்கள் ..அது அவர்களுக்கு விதிக்கப் பட்ட தண்டனை என்றும் சொன்னார்கள்  ,இப்படியும் நேர்ந்து கொண்டு சுத்தம் செய்வார்கள் என்றும் சொன்னார்கள் ...
உள்ளே எங்கேயும் உருவச் சிலை வழிபாடு இல்லை ,மத குருமார்கள் புனித நூலில் உள்ளதை ஓதிக் கொண்டு இருந்தார்கள் ,இருவர் பாடிக்கொண்டிருந்த  பஜன் கீர்த்தனைகள் பொற்கோவில் வளாகம் முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்தது !
இதுக்கு அப்புறம்தான் நமக்கு மிகவும் பிடித்த விஷயம் வருகிறது ,வேறொன்றுமில்லை , போஜனம்தான் !அந்த போஜனத்திற்கு பெயர் லங்கர் என்றார்கள் .பொற்கோவில் பின்புறம் இருக்கும் பெரிய ஹாலில் லங்கர் நடந்து கொண்டிருந்தது .லங்கரில் பரிமாறப் படுவது  ரொட்டிதான் அதாவது சப்பாத்தி உடன் தாள்மக்கனி.(தாள்மக்கனி என்றதும் எனக்கு வந்த மாதிரி ,ஹிந்தி நடிகை  மந்தாகினி  உங்கள் நினைவுக்கு  வரமாட்டார்  என்று நம்புகிறேன் ) தினசரி லட்சம் பேருக்கு இங்கே இந்த தானம் கொடுக்கப் படுகிறதாம் லட்சத்தில் ஒருவராக நாங்களும் தின்று களித்தோம் .இங்கே ஒரு கண்டிஷன்,ரொட்டியை இரு கைகளையும் ஏந்தி நாம்தான் வாங்கிக் கொள்ளவேண்டும் ...
           என்றும் அணையாத வள்ளலார் ஜோதியைப் போல் அங்கே பெரிய பெரிய அடுப்புகளில் சமையல் நடந்துக் கொண்டே இருந்தது ,பணியாளர்கள் சிலர்தானாம் ,எல்லா  பணிகளையும் அங்கே வரும் பக்தர்கள் தான் செய்துக் கொண்டிருந்தார்கள் .காய்கறி நறுக்குவது ,எச்சில் தட்டு கழுவுவது போன்ற பல வேலைகளை நேர்ந்து கொண்டுவந்தவர்கள்  செய்வதாக சொன்னார்கள் ..( நம் பக்தர்கள் நேர்த்திக்கடன் என்று மயிரைக் கொடுப்பார்கள் ,ஆட்டை அறுத்து  
வயிறு புடைக்க தின்று  தீர்ப்பார்கள் .அவர்கள் செய்வது அல்லவோ உண்மையான நேர்த்திக் கடன் ?)

பயணம் தொடரும் ...
=================================================================================

மஞ்சள் உதவுது திருமணத்திற்கும் திவாலுக்கும் !
            ''அவர் வியாபாரத்திலே திவால் ஆயிட்டார்னு சொன்னாங்க ,இப்ப பொண்ணோட கல்யாணத்தை ஆடம்பரமா செய்றாரே ,எப்படி ?''
             ''அந்த மஞ்சள் நோட்டீசில் சம்பாதித்ததை ,இந்த மஞ்சள் நோட்டீசில் செலவு பண்றார் !''

மக்களைக் காப்பதிலும் பூஜ்ஜியம்தானா ?
 ஒவ்வொரு இயற்கை கோரத்தாண்டவமும் சொல்கிறது ...
முன் எச்சரிக்கை நடவடிக்கையில்... 
இன்னும் இந்தியா 'பூஜ்ஜியம் 'கண்டுபிடித்த 
மிதப்பிலேயே உள்ளது என்பதை !

28 June 2016

கட்டில் காலோட கால்கட்டு :)

              ''உன் வீட்டுக்காரர் காலை ஏன்  கட்டில் காலோட சங்கிலி போட்டு கட்டி வச்சிருக்கே ?''
             ''இல்லைன்னா ,அவர் பாட்டுக்கு கதவை திறந்து போட்டுட்டு  தூக்கத்தில்  நடந்து போய் விடுகிறாரே !''

பொண்ணோட முடி முழங்கால் வரை ,வாய் ?
          ''நீதானே முடி நீளமா இருக்கிற பொண்ணு வேணும்னு கட்டிகிட்டே ,இப்போ ஏன் வருத்தப் படுறே ?''
          ''வாயும் நீளம்னு இப்போதானே தெரியுது ?''
                (படத்திலுள்ள பெண்ணுக்கும்  மேற்படி ஜோக்குக்கும்  மயிரளவு கூட சம்பந்தமில்லை :) 
மனைவியிடம்  'கடி 'வாங்கியதால் வந்த மறதியோ ?
         '' ஆயிரம் கொசு கடித்தாலும் கடிக்கிற உணர்வே தெரிய மாட்டேங்குதா..எப்போ இருந்து இப்படி ?'' 
         ''ஒருநாள் தெரியாத்தனமா டூத் பேஸ்ட்டிற்கு பதிலா ,கொசு விரட்டி கிரீமினால் பல் தேய்ச்சதில் இருந்துதான் டாக்டர் !''

ஜாக்கிரதை ,நாக்கு நம்மை கவிழ்த்து விடும் !
          '' அந்த உவமைச் சக்கரவர்த்தி என்ன சொல்றார் ?''
          ''வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும் மீண்டும் உள்ளே  போகாதுங்கிறாரே !''

இது ஒரு தந்தையின் சுயநலம் மட்டுமில்லை !
என் ஆதர்ச குருவும் பிடிக்காமல் போனார் ...
நானும் விவேகனந்தராய் ஆகப் போகிறேன் என்று 
என் ஆசைமகன்  சந்நியாசம் வாங்கியதால் !

27 June 2016

குத்தாட்டம் பார்க்க வர்றீங்களா :)

 எரிவதைப்  பிடுங்கினால் கொதிப்பது அடங்குமா :)        
              ''என் பையன் தினசரி ஊர் வம்பை 'விலை'க்கு வாங்கிட்டு வர்றான் ,என்ன செய்றது ?''
              ''நாலு நாள் பாக்கெட் மணியை நிறுத்திப் பாருங்க !''
மந்திரியை தாரிலே முக்கி எடுத்தாலும்  தவறே இல்லை !
       ''  மந்திரி என்ன சொன்னார் ... அவர் மேலே செருப்பை எறியுறாங்களே ?''
        ''இப்போது வாழைத் 'தார் 'விடும் சீசன் ஆரம்பித்து விட்டதால் விரைவில் ரோடுகள் போடப்படும்னு சொன்னாராம் !''

பதிவர் என்றானபின் ,சுற்றுலாப் பயண  அனுபவங்களை எழுதவில்லை என்றால், தலை இஞ்சி நூறாய்  (சுக்கு நூறாய்  என்று இன்னும்  எத்தனை நாள்தான் சொல்லிக் கொண்டிருப்பது ? )  உடைந்து விடும் என்பதால், சென்ற 2014 ஆண்டு இதே நாளில் போட்ட பதிவு இதோ .....
தினசரி இங்கே குத்தாட்டம்தானா ?
                             வட இந்திய டூர் - பாகம் 1
 அண்மையில் வட இந்தியச் சுற்றுலா  சென்றபோது,   நம் நாட்டையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோடுஅமைந்து இருக்கும் ஊரான வாகா பார்டர் போய் பார்க்கலாமே என்று டெல்லியில் இருந்து கிளம்பினோம் .அங்கே என்ன விசேசம் என்றால்...எல்லைப் பாதுகாப்பு படையினர் தினசரி நடத்தும்  கொடியிறக்க நிகழ்ச்சிதான் !
       எங்கள் வாகனம் நெடுஞ்சாலையில் உள்ள  ஒரு டோல் கேட்டை நெருங்கிக் கொண்டிருந்த போது,பின்னால் அவசர கால சைரன் ஒலியுடன் வேகமாக வந்தது ஒரு கார் ..அது கடந்து செல்ல அங்கிருந்த காவல் துறையினர் டோல் கேட்டில் ஒரு வழியை ஏற்படுத்தினார்கள் .யாரோ ஒரு VIP செல்கிறார் போலிருக்கிறது நினைத்து பார்த்தால் .அந்த எஸ்கார்ட் வண்டிக்கு பின் ஒரு வால்வோ பஸ்,அதற்கு பின்னாலும் ஒரு எஸ்கார்ட் கார் .இவ்வளவு பாதுகாப்பும் அந்த பஸ்சிற்கு! ஏனென்றால் ,அது டெல்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு செல்லும் பஸ்!இடையில் அந்த பஸ் எங்கேயும் நிற்காதாம்!வாகா கேட்டில் இறக்கி விடப்படும் பயணிகள் ,அங்கு தயாராக இருக்கும் பாகிஸ்தான் பஸ்ஸில் லாகூர் செல்வார்களாம்!
         நாங்கள் கொடிஇறக்க நிகழ்ச்சி நடைபெறும் வாகா பார்டர் சென்று சேர்ந்தோம்.அங்கே பார்த்தால் ஒரு ஊரே திரண்டது போல் கூட்டம் அலை மோதிக்கொண்டு இருந்தது .நாலரை மணி வாக்கில் கேட்டை திறந்தார்கள் .ஒரு ஒழுங்கு இல்லாமல் மக்கள் அடித்து பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள் .மெடல் டிடெக்டர் செக் அப் முடிந்த பின் ,பார்வையாளர் மாடத்தில் போய் அமரலாம் என்று பார்த்தால் முடிய வில்லை .சுமார் இருபதாயிரம் பேரை கொள்ளக்கூடிய இடத்தில் முப்பதாயிரம் பேருக்கு மேற்பட்டோர் கூடி  இருந்தனர் !
     எல்லைப் பாதுகாப்பு படையினர் அங்கே வரும்  மக்களை ஆரம்பத்தில் இருந்தே வரிசையாக ஒழுங்குபடுத்தி அமரவைத்தால் நல்லது .இல்லையென்றால் எதிர்காலத்தில்  விரும்பத்தகாத விளைவுகள்  ஏற்படலாம் ,இந்த விசயத்தில் BSFஅதிக கவனம் செலுத்தினால் நல்லது !
         பார்வையாளர் மாடம் முழுவதும் ஆர்வத்துடன் மனித தலைகள் .நிகழ்ச்சி தொடங்கியது .மாடத்தின் முன் உள்ள இடத்தில் ,பெண் குழந்தைகளை அழைத்து நமது தேசீயக் கொடியை அவர்கள் கையில்  கொடுத்து சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திற்கு ஓடச் சொன்னார்கள் .பெருமை பொங்க கொடியை பறக்க விட்டு கொண்டே ஓடினார்கள் ,ஓடினார்கள் ,நம் தேசத்தின் எல்லைக்கே ஓடினார்கள் !
பிறகு தேசபக்தி பாடல்கள் முழங்கியது ,விரும்பமுள்ள பெண்கள் ,குழந்தைகள்  ஆடலாம் என்று அனுமதிக்கப் பட்டார்கள் .துள்ளல் இசையுடன் வந்த பாட்டிற்கு பெண்கள் ஆடினார்கள் ,ஆடினார்கள் ,சினிமா குத்து ஆட்டம்கூட தோற்றுவிடும் அப்படி ஆட்டம் போட்டார்கள் !அதைப் பார்த்த எனக்கே இடுப்பு சுளுக்கிக் கொண்டு விடும் போலிருந்தது  !  ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் !  
         ஒலி பரப்பான தேசபக்தி பாடல்கள் எல்லாமே ஹிந்தி பாடல்கள்தான் .இந்திய நாடு என் வீடு என்று தொடங்கும் நம் பாடலைப் போட்டால் நன்றாய் இருக்குமே என்று எனக்கு பட்டது .அது இந்த 'ஹிந்தி'ய 'நாட்டில் எங்கே நிறைவேறப் போகிறது ?
        பிறகு ,BSF படை வீரர்கள் உரத்த கமென்டுடன்,கம்பீர நடை போட்டார்கள் கொடி மரத்தை நோக்கி !தலைக்கு மேலே காலை தூக்கி அவர்கள் கொடி வணக்கம் செலுத்தியது நன்றாய் இருந்தது ! பாரத் மாதாக்கி ஜெய் என்று நம் மக்கள் உணர்ச்சி பெருக்குடன் கோஷம்போட்டு தங்களின்  தேச பக்தியை நிரூபித்தார்கள் !
             இந்தியா என்று பெயர் பொறிக்கப்பட்டு  அழகாய் காட்சி தரும் கேட் திறக்கப் பட்டு ,அங்கு ஏற்றப் பட்டிருக்கும் நமது மூவர்ணக் கொடி,தேசீயக் கீதம் முழங்க இறககப் படுகிறது ,இதே போன்று பாகிஸ்தான் தரப்பிலும் நிகழ்ச்சி நடத்தப் பட்டு இருநாட்டு கொடிகளும் ஒரே நேரத்தில் கொடிஇறக்கம் நடத்தப்படுகிறது .      நம் நாட்டுதரப்பில்,  பார்வையாளர்கள் கூட்டத்தால் மாடங்கள் நிரம்பி வழிகின்றன .ஆனால் .பாகிஸ்தான் தரப்பில் பார்வையாளர்கள் நூறு பேர்கள் கூட இல்லை ,இதை பெருமை பொங்க சொல்லிக் கொண்டு நம்மவர்கள் தங்களின் தேச பக்தியை வெளிப் படுத்தினார்கள் .தீவிர தேச பக்தர்கள் வந்தே மாதரம் என்ற போது மற்றவர்களும் அதை திருப்பி சொன்னார்கள் .பாகிஸ்தான் டவுன் டவுன் என்று ஒருவர் கோஷம் போட்டபோது, யாரும் அதை திருப்பி சொல்லாதது எனக்கு மகிழ்ச்சியை தந்தது !
    அங்கே எடுக்கப் பட்ட சில புகைப் படங்கள் ,இதோ உங்கள் பார்வைக்கு ......(படத்தைக் கிளிக் செய்து பார்ப்பது கண்களுக்கு நல்லது :)
பயணம் தொடரும் ....
நன்றி மறக்காத டாக்டர் !
            ''டாக்டர் அறையிலே நன்கொடை கொடுத்தவங்கன்னு  நிறைய போட்டோ இருக்கே ,அவங்க எல்லாம் யாரு ?''
         '' டாக்டரிடம் ஆப்ரேசன் பண்ணிக்க காசையும் கொடுத்து ,உயிரையும் தியாகம் செய்தவர்கள்  !''

தொப்பைக்கு 'goodbye 'எப்போது ?
தொப்பை விநாயகர் சிலைகூட ...
கடலில் உடனே கரைந்து விடுகிறது !
கடற்கரை ஓரத்தில் வேர்க்க வேர்க்க ஓடுபவர்களின் 
தொப்பைதான் கரைவதாக தெரியவில்லை !

26 June 2016

மாப்பிள்ளையால் செய்ய முடிந்ததும்,முடியாததும் :)

 இதுக்கு சீல்  வைக்கிறது  யாரு :)               
               ''ரேசன் கடைக்கு  வந்து தராசையே பார்க்காத மாதிரி  உற்று உற்றுப்  பார்க்கிறீங்களே ,ஏன் ?''
                ''ஐந்து கிலோ சீனிக்கு ஐந்தரைக் கிலோ போடுறீங்க ,அதை வெளியே எடைப் போட்டா நாலரைக் கிலோதானே இருக்கு ?''

மாப்பிள்ளையால் முடிந்ததும்,முடியாததும் :)
                ''நான் செய்றது எல்லாமே தலைக்கீழா இருக்கா ,என்ன மாமா சொல்றீங்க ?''
            '' என் பொண்ணு முழுகாம இருந்தா பரவாயில்லை,போட்ட நகைங்க எல்லாம் அடகு வச்சு  முழுகிப் போச்சுன்னு சொல்றீங்களே !''

 மனைவி செலவாளின்னா பணத்தை எடுத்துதானே ஆகணும்:)
        ''என்னங்க ,பவித்ராங்கிற என் பெயரை ஏன் மாத்திக்கச்  சொல்றீங்க ?''
         ''பணத்தை வித் ரா பண்ணி முடிய மாட்டேங்குதே !''

காலம் செய்த கோலமடி !
ஆட்டோமேடிக் வாட்ச் வந்ததால் ... 
ஆட்காட்டி விரலும் ,கட்டை விரலும் செய்த வேலை நின்றுபோனது !
செல் போனில் டயம் தெரிவதால் ...
வாட்ச் வாங்குவதே  நின்று போனது !

25 June 2016

மனைவி வீட்டில் இல்லா நேரத்தில்...:)

 சொன்னால் மட்டும் போதுமா :)          

            ''நீங்களே டாக்டர் ,காய்ச்சல்னு எதுக்கு அடுத்த  டாக்டரிடம் போறீங்க ?''

             ''செல்ப்  மெடிஸின் சாப்பிடுறது தப்பாச்சே !''


முறைப் பொண்ணு அவ்வளவு லட்சணம் போலிருக்கு !

        ''ஓடிப் போற நம்ம பின்னாலே யாரோ தொடர்ந்து வர்ற மாதிரி இருக்கே !''

       '' முறைப் பையன்தான் ,நீங்ககூட என் கழுத்துலே  மூணு முடிச்சு போட மாட்டீங்கன்னு  சந்தேகப் பட்டு பின்னாடியே வர்றார்  !''


சென்ற 2014 வருடம் ,வலையுலகத்தை கலக்கிய  தொடர் பதிவு ....நினைவுக்கு வருகிறதா ?என் பதிவினில் அதிகபட்ச கமெண்ட்களைப் பெற்றது அந்த பதிவு என்பதால்  மீள்பதிவு செய்து  மகிழ்கிறேன் ,ரசித்து மகிழ நீங்கள் தயாரா :)


மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் ....

(பத்து கேள்விகள் தொடர் பதிவு )

தொடர் பதிவாய் வலம் வந்த  பத்து கேள்விகளின்  மூலவர் அமெரிக்காவாழ்'மதுரைத் தமிழன் 'என்று நினைக்கிறேன் ...அவரின் இந்த கேள்விகளில் மாட்டிக்கொண்ட  சகோதரி அம்பாளடியாள் அவர்கள் ,ஒரிஜினல் மதுரைவாழ் தமிழனான என்னிடம் கேள்விகளை தள்ளிவிட்டார் ...தான் பெற்ற இன்பம் (?)பெறுக  இவ்வையகம் என்ற அவரின் பரந்த மனப்பான்மைக்குவாழ்த்துக்கள் !


சரி ,கேள்விகளைப் பார்ப்போமா ?இதென்ன கொடுமையா இருக்கு ?விருப்பமான ஐந்து கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதாதா ?

பத்துக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கே !

 1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்கொண்டாட விரும்புகிறீர்கள்?

            வழக்கம் போல மறந்துதான் !

 2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

            நீச்சலை ...ஏனென்றால் கற்றுக்க வேண்டியது கடல் அளவு இருக்கே !

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

          தாலிக் கட்டின நேரத்திற்கு முன்புதான் !கிணறு என்று தெரிந்தே குதிக்கிறோமே என்று !

4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன? 

         பவரா ?அது போன நாளைத்தான் வருசா வருஷம் திருமண நாள்னு கொண்டாடிக் கிட்டே இருக்கேனே !

5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 

         குழந்தைகளுக்கா .கல்யாணத்திற்கு வந்தவங்களுக்கா ?

6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

          உலகெங்கிலும் உள்ள பிரச்சினை ..இணையத்தில் என் மொக்கைகளையும் உங்களைப் போன்றவர்கள்  படிக்க வேண்டியிருக்கே !இதைத் தீர்க்க ஒரே 

வழி...இணையத்தை முடக்கி விடுவதுதான் !,ஏனென்றால் அது இருக்கும் வரை என் கையை கட்டிப் போடமுடியாதே !

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்? 

         நான் கேட்காமலே எல்லோரும் அதைதானே செய்துக் கொண்டிருக்கிறார்கள் ?

8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

            காமெடி பீசுக்கு இதுவும் விளம்பரம்தானே என்று நினைச்சுக்குவேன் !

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

        என்ஜாய் ...மனைவி ஊருக்கு...இல்லை இல்லை ...உலகத்தை விட்டே போயிட்டா என்று !என் நண்பர் 

என்னை போலவே  படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறாரே !

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

           அதாவது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தானே ?இப்ப செய்வதைத்தான் செய்துக் 

கொண்டிருப்பேன் ..உங்க கழுத்தை அறுத்துக் கொண்டு !

         அப்பாடா ...ஒரு வழியாய் பதில் சொல்லியாகி விட்டது ....:)


பயணிகளுக்கு இது வசதிதானே ?

            ''அந்த வீடியோ கோச் பஸ், மினி தியேட்டர் மாதிரியே இருக்கு !''

           ''ஆடியோ வீடியோ அவ்வளவு நல்லா  இருக்கா ?''

           ''அது மட்டுமில்லே ,கண்டக்டர் இடைவேளை நேரத்திலே முறுக்கு ,கோன்  ஐஸ் எல்லாம் வித்துக்கிட்டு வர்றாரே !''


ஹீரோக்கள் எல்லாம் வில்லனுக்கு முன்பே போய் சேர்ந்து விட்டார்கள் !

படத்திலே வில்லனாய் இருந்தாலும் ...

நிஜத்திலே அவரும்  ஹீரோதான் !

எமனைக்கூட நெருங்க விடாமல் நீண்ட நாள் வாழ்ந்தார் ...

MN நம்பியார் !

24 June 2016

வரதட்சணையை வசூலிக்கும் மனைவி :)

               முதலில்,நண்பர்  கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி !நன்றி எதற்கு என்று நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா ?இதோ ,இதைக் கிளிக்கிப் பார்த்து தெரிஞ்சிக்குங்க !

ராசி நல்ல ராசி :)            
              ''ஜெயிலுக்கு போயிட்டு வந்ததில் இருந்து தலைவர் முற்போக்குவாதி ஆயிட்டாரா ,எப்படி ?''
              ''ராசி எண் என்று அவர் நினைத்ததே  ,அவர் இருந்த  ஜெயில் செல் நம்பரா போச்சே !''

ஆஸ்திரேலியா ஜனத் தொகையை விட இவர்கள் அதிகம் :)                
              ''லஞ்சம் வாங்கிறவனை எல்லாம் பிடித்துக் கொண்டு போய் ஒரு தீவிலே விடணும்!''
              ''அவ்வளவு பெரிய தீவுக்கு எங்கே போறது ?''

குற்றவாளியின்  சிந்தனை  சரிதானா  :)
          ''நீ பண்ணின குற்றத்திற்கு நான் 'ஆணி 'அடிச்ச  மாதிரி தீர்ப்பு சொல்லப் போறேன் !''
          ''அது உங்களாலே முடியாது ,எஜமான் !''
          ''ஏன் ?''
          '' உங்க கையிலே இருக்கிற மரச் சுத்தியால் ஆணி அடிக்கமுடியாதே !''

வரதட்சணையை வசூலிக்கும் மனைவி :)
          ''ஐம்பதாயிரம் செலவுலே  வைர மோதிரம்  வாங்கிக் கொடுத்துட்டேன் ...இன்னும்நாலரை லட்சம்னு முணுமுணுக்கிறீயே ,ஏன் ?''
          ''உங்களை வாங்கிறதுக்கு எங்க அப்பா செய்த செலவுலே இன்னும் வரவேண்டியதை சொன்னேங்க !''
         ( மனைவி இந்த டிசைனைத் தேர்ந்து எடுத்ததில் உள்குத்து எதுவும் இருக்குமோ ?)

இதுவும் ஒரு பிரசவ வைராக்கியம் தான் :)
தையல் கூலியை கொடுக்கும் போதெல்லாம் ...
மனதிலே ஒரு வைராக்கியம் ...
'இனிமேல் ரெடிமேட் மட்டுமே வாங்க வேண்டும் 'என்று !


23 June 2016

கணவன் மனைவி சேர்ந்து குளிச்சாலுமா சண்டை வரும் :)

இவன் டயத்துக்கு ஸ்கூலுக்கு வர மாட்டான் போலிருக்கே :)        
                '' அதெப்படி ஒரே பொருள் ,காலையில் எரிச்சலும்  ,மாலையில் சந்தோஷமும் தர முடியும்  ?''
              ''எங்க ஸ்கூல் பெல் தருதே !''
சுவீ(ட்)கார  விழா  என்று அழைத்து இருப்பார்களோ :)              
          ''பந்தியில் சாப்பாட்டுக்கு முன்னால் சுவீ ட் மட்டுமே வைப்பார்கள் ,நீங்க காரமும் வைக்கிறீங்களே ,ஏன் ?''
          ''இந்த சுவீகார விழாவை நீங்க மறக்கக் கூடாதுன்னுதான் !''

கணவன் மனைவி சேர்ந்து குளிச்சாலுமா சண்டை வரும் :)
          ''காசிக்கு  முதல் தடவை வந்துட்டு , இந்த படித்துறையில்  ஏற்கனவே குளித்த மாதிரி இருக்குன்னு சொல்றீங்களே ,ஏன் ?''
           ''இந்த  'நாரதர் படித்துறை'யில் குளிக்கிற  தம்பதிகளின் வாழ்க்கை முழுவதும் சண்டையாத் தான் இருக்கும்னு  சொல்றாங்களே !''

இந்த கேள்விக்கு பதிலேது :)
''எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுது ?''
''காயப்போட்ட எலியைத்தான் கேட்கணும் !''

உலக அதிசயம்னா சும்மாவா ?
பெயர் என்னவோ 'பைசா 'கோபுரம்தான் ...
மேலும் சாய்வதை தடுக்கச் செலவோ ,கோடிக்கணக்கில் !

22 June 2016

பார்க்கக் கூடாததைப் பார்த்தா ,இப்படித்தான்:)

 நல்ல வேளை,உருப்படியா வருதே :)           
                 ''ரயில் நேரத்தில் வருமா ?''
                ''வராது ,தண்டவாளத்தில் தான் வரும் !''

பழமொழி பொருத்தம்தானே :)
            '' என்னைப் பார்த்தா ,யானை வாங்க காசிருக்கு ,அங்குசம் வாங்க காசில்லைங்கிற பழமொழி ஞாபகம் வருதா ,ஏண்டா ?''
             ''புது பைக் வாங்கிட்டு ஹெல்மெட் வாங்க காசில்லைன்னு சொல்றீயே !''

பார்க்கக் கூடாததைப் பார்த்தா ,இப்படித்தான் :)
          ''உன் மனைவி உன் மூஞ்சியிலே குத்துவிடும் போது, டிவியிலே என்ன பார்த்துகிட்டு இருந்தே ? ''
           ''குத்துப் பாட்டுக்களைதான் !''
ருசி ....புரிந்ததும் புரியாததும் :)
வாய்க்கு ருசியா ஆயிரம் அரிசி ரகங்களை உண்டாலும் ...
வாய்க்கரிசி பாசுமதியா ,ரேசன் அரிசியா என்று  புரியப் போவதில்லை !

21 June 2016

பெண்டாட்டி கைமணம் புரிந்தது :)

               ''நாலு  நாள் ரயில் பயணம் போயிட்டு வந்ததில் இருந்து ,உன்  புருஷன் அதிகப் பிரியமா இருக்காரா ,எப்படி ?''
               ''ரயில்வே கேண்டீன்  அயிட்டம் டேஸ்ட் அப்படி !''
இந்த பையன் பரீச்சையிலும்  'முட்டை' தான் எடுப்பான் :)
             ''கோழி முட்டையிட்டு அடை காத்து குஞ்சு பொறிக்கும்னு சொன்னா, என் பையன் நம்ப மாட்டேங்கிறான்டி  !''
         ''எப்படி நம்புவான் ?நாமதான் முட்டையை  வடைச் சட்டியில் பொறித்து சாப்பிடக் கொடுத்து  விடுகிறோமே !''

நாய் வாலை நறுக்கி ,நாய்க்கே சூப்பு வைக்கலாமா ?
              '' கப்புலே வைச்ச சூப்பை ஒருசொட்டு விடாமே நக்கி நக்கி குடிக்கிற அந்த நாய்க்கு, உண்மை தெரிஞ்சா ...உன்னைக் கடிச்சே கொன்னுடுமா ,ஏன் ?''
               ''அதோட வாலை நறுக்கி வச்ச சூப் ஆச்சே !''

மனைவியும் மனோரஞ்சிதப் பூதான் !
காதலி மனைவியானதும் புரிந்தது ...
அவள் மனோரஞ்சிதப்பூவின் ஜாதியென்று !
தள்ளி நின்று ரசித்தபோது ...மணந்தாள் !
மணமான நெருக்கத்தில் தந்தாள் ...
தலைச்சுற்றலையும் மயக்கத்தையும் !


20 June 2016

காதல் வந்தால் கவிதை எப்படி:)


 அதெல்லாம் அந்த காலம் :)            
            ''ஒலி கேட்டேன்  வழி கொடுத்தேன்   கொலுசு சத்தம்னு  நான் எழுதியது ,ரொம்ப காலத்துக்கு முந்தின்னு  எப்படி கண்டுபிடிச்சே ?''  
             ''இப்போதான் ஏர் ஹாரன் அடித்தாலும் உன் காதுலே விழ மாடேங்குதே !'' 

வீட்டுச் சண்டையை நாட்டுச் சண்டை ஆக்கலாமா ?
            ''அரசே,பக்கத்தில்  இருப்பது எல்லாம் நட்பு  நாடுகளாச்சே ,வம்புச் சண்டைக்கு ஏன்  போகணும் ?''
                ''அந்தப்புரத்தில் நடக்கிற சக்களத்தி சண்டையை காணச்  சகிக்கலையே !''

காதல் வந்தால் கவிதை எப்படி?
மண்ணில் விழும் விதைகள் யாவும் முளைப்பதில்லை ...
காதலில் விழும் மனதில் எல்லாம் கவிதை முளைக்கிறதே ,எப்படி ?

19 June 2016

பூக்களுக்கும் பிடிக்கும் என்னவளை :)


நோயாளிக்குத் தான்  பேச்சு வராது ,டாக்டருக்குமா ?
           ''மூணு  மாசத்திலே எட்டு லட்ச ரூபாய் செலவு செய்ஞ்சும் உங்கப்பாவுக்கு பேச்சு வரலேன்னா ,டிஸ்சார்ஜ் செய்யச் சொல்ல வேண்டியது தானே ?''
          ''மூச்சு இருக்கிறவரைக்கும் டிஸ்சார்ஜ் என்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு டாக்டர் சொல்றாரே !''

ஆமை புகுந்தா வீட்டிற்கும்,ஒவ்வாமை புகுந்தா உடம்புக்கும் ஆகாது !
          ''அலர்ஜிங்கிற வார்த்தையை கேட்கும் போதெல்லாம் இரத்தம் கொதிக்குது,டாக்டர் !''
           ''அலர்ஜியே  அலர்ஜி ஆகுதா ,ஏன் !''
         ''ஒவ்வாமையை ஏன் அலர்ஜின்னு மரியாதையா சொல்லணும் ?''

பூக்களுக்கும் பிடிக்கும் என்னவளை !
நிஷகந்திப் பூவே ...
என்னவள் உன்னை சூடிக் கொள்ளவில்லை என்ற கோபமா ...
நடுஇரவில் மலர்ந்து விடிவதற்குள் வாடி விடுகிறாயே !

18 June 2016

சைட் அடிக்காதே ...எச்சரிக்கும் நிறம் :)


இவரோட கொள்கைப் பிடிப்பு  யாருக்கு வரும் :)
             ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''
             ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு நம்புகிறவன் நான்  !''

எளனியிலே நிறைய தண்ணி இருக்கணும்னு ஆர்டர் ,ஏன் ?
            ''நம்ம கணேஷ் வழுக்கை தலையால் நமக்கு ஒரு வகையிலே  லாபமா ,எப்படி ?''
            ''இளநீர் குடிக்கப் போனா 'நல்ல வழுக்கையா வெட்டுங்க 'ன்னு  சொல்ல விடாமல் , அவனே ஆர்டர் பண்ணிடுறானே !''

சைட் அடிக்காதே ...எச்சரிக்கும் நிறம் !
வேறெந்த நிறத்தைவிட ...
வெகுதூரத்திலும்  தெரியும் 'மஞ்சள் 'மகிமை யை ...
நமது முன்னோர்கள் உணர்ந்துதான் 
தாலிக் கயிறில்  மஞ்சள் பூசினார்களோ ?

17 June 2016

வேண்டாத மேனேஜரை விரட்டும் வழி:)


               ''ஆபீசுக்கு போகும்போது , ஏண்டா என் கையிலே வெங்காய வெடியை கொடுக்கிறே ?''
               ''புது மானேஜர் ரொம்ப மோசம் ,அவருக்கு  சீக்கிரம் வேட்டு வைக்கணும்னு நீங்கதானேப்பா சொல்லிக்கிட்டு இருந்தீங்க !''

ஜாக்கிரதை 'ஃபூல் 'ஆகாதீங்க !
           ''அந்த பங்களா வாசல்லே ,வித்தியாசமா போர்டு மாட்டி இருக்காங்களா ,எப்படி ?''
         ''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் வைக்கப் 
பட்டு உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற வேண்டாம்னுதான் !''

மருந்து கால் ,நம்பிக்கை முக்கால் !
போலி மருந்தினாலும்  நோய் குணமாகும்  ...
நம்பிக்கை  நெஞ்சில் இருந்தால் !


16 June 2016

புரிந்தது புருசனின் துரோகம் !

மெண்டல் மனதில் என்னவோ :)
                 ''மன நல டாக்டரைப் பார்க்கும் அளவிற்கு என்னாச்சு ,உன் வீட்டுக் காரருக்கு ?''
                 ''ATMல் எடுத்த பணத்தைக் கிழித்து போட்டு விட்டு ,சிலிப்பை பத்திரமா  கொண்டு வந்திருக்காரே :)

புரிந்தது புருசனின் துரோகம் !
          ''ரொம்ப நாளைக்கு பிறகு ,என் வீட்டுக்காரர் சினிமாவுக்கு கூட்டிட்டுப் போனார்டி ...ஐஸ் ,பாப்கார்ன்னு எதையும் வாங்கித் தரலே ...கஞ்சப் பிசினாறி !''
           ''அவரை  அப்படியெல்லாம் வையாதே ...என்னை கூட்டிட்டுபோனா தாராளமா செலவு செய்றாரே ! 

கருப்புக்கே உரிய தனிச்சிறப்பு !
சிகப்பு நிறம் என்ன ஓவியமா ,,,
ஓவிய மையின் பெயரே 'இந்தியன் இங்க்'தான் !


15 June 2016

Topup செய்ததும் காதலன்தான் !

பிற்போக்குவாதின்னா  என்ன அர்த்தம் என்று புரிகிறதா :)
         '' ஆபீசுக்கு ஏன் வரலேன்னு கேட்டா ,நேற்று மட்டும் பிற்போக்குவாதி ஆயிட்டேன்னு சொல்றீங்களே ....என்னைக்குதான் நீங்க முற்போக்குவாதியா இருந்தீங்க ?''
         ''வாந்தி எடுத்த அன்னைக்குதான் !''

இதுக்கு அவரே காசியிலே தங்கிவிடலாம் !
                  ''காசிக்குப் போனா ,எதையாவது விட்டுட்டு வரணும்னு சொல்றாங்க ,எனக்கும் போகணும் போலிருக்கு !''
            ''போயிட்டு வர வேண்டியதுதானே ?''
         ''விட்டுட்டு வரலாம்னா ,என் சம்சாரம் வர மாட்டேங்கிறாளே !''

Topup செய்ததும் காதலன்தான் !
திருமணம் ஆனதும் ...
மிஸ் கால்   மிசஸ் காலானது !

நெற் 'பிள்ளை 'க்கு பாய்வது புல் 'அப்பனுக்கும் பாயும் ?
புருசன்மார்களுக்கு வகைவகையாய்
புசிக்க கிடைக்கிறது என்றால் ...
பிள்ளைகள் மேல் தாய் காட்டும்
பாசம்தான் காரணம் !


14 June 2016

இரட்டையரில் முதலில் பிறந்தவன் இளையவன் ,எப்படி :)


இதுக்குத்தான் நம்பக்கூடாதுன்னு சொல்றது :)
                 ''என்னடா சொல்றே , மனைவிமார்கள்  கடவுள் மாதிரியா ?''
                 ''ஆமா ,கணவன்  எதைச் சொன்னாலும் கேட்டுகிட்டு ,அவர்கள் இஷ்டப் படிதானே நடந்து கொள்கிறார்கள் ?''

போலீஸை வேற எப்படி செலக்ட் செய்யலாம் ?
           ''போலீஸ் தேர்வுக்கு ஓட்டப்பந்தயம் வைப்பது ,கயிர் ஏறுவது ,உயரம் தாண்டுவது போன்ற கடுமையான டெஸ்ட் எல்லாம் எதுக்கு வைக்கிறாங்கன்னு தெரியலே !''
            ''என்னடா சொல்றே ?''
           ''உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்துகிட்டு ,மாமூல் வாங்கிறதுக்கு அதெல்லாம் தேவையான்னுபடுதே !''

சட்டை ,பனியன் தத்துவம் புரிகிறதா ?
இரட்டைக் குழந்தைகளில் ...
முதலில்  பிறந்தவன் மூத்தவன் அல்லன்  ! 
எப்படி என்றால் ...
கடைசியாய் போட்டுக் கொண்ட  சட்டையை முதலில் கழற்றிவிட்டு ,
முதலில் போட்டுக் கொண்ட பனியனை கடைசியில் கழற்றுவதைப்போல !

13 June 2016

அய்யாவுக்கு இருக்கு ஆப்பு:)!

அது மல்டி ஸ்பெசாலிட்டி  ஆஸ்பத்திரியா இருக்குமோ :)           
          ''அந்த கண்டக்டருக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்தியா ,ஏன் ?''
          ''லட்ச லட்சமா வச்சுகிட்டு இருக்கிறவங்க ,இந்த ஆஸ்பத்திரி ஸ்டாப்பிலே இறங்குங்கன்னு சொல்றாரே !''

அய்யாவுக்கு இருக்கு ஆப்பு :)
          ''அம்மா .நம்ம வேலைக்காரி பெயர் சித்ராதானே ?''
           ''ஆமாண்டா கண்ணு ,எதுக்கு கேட்குறே ?''
         ''சித்தின்னு சுருக்கமா கூப்பிட்டா  போதும்னு அப்பா ஏன் சொல்றாரு ?''

லைப் லாங் கியாரண்டி...
முதலில் உருவாகி கடைசியில் நிற்பது !
அதன் கியாரண்டி காலம் கூடுவதும் குறைவதும் ...
லைப் பார்ட்னரைப் பொறுத்து !

12 June 2016

'புருசனதிபதி 'என்று மனைவியை சொல்லலாமா :)


 கண்ணன் பிறந்தது அயோத்தி அருகில் உள்ள ஜெயிலில் :)                 
             ''ரயிலில் 'வித்தவுட்'டில் ராமர் பொறந்த இடத்துக்கு போய் காண்பிக்கிறேன்னு சவால் விட்டாரே  ,அவர் அங்கே போயிட்டாரா ?''
             ''செக்கரிடம் மாட்டிகிட்டு கண்ணன் பிறந்த இடத்துக்கு போயிட்டார் !''

பிள்ளைமேல் நம்பிக்கை இப்படித்தான் இருக்கணும் !
             ''உங்க மகன் தீக்குளிக்கப் போறானாமே ?''
             ''ஆமா ,அவன் கிழிச்சான் ,அவன் குளிச்சே ஆறு மாசமாச்சு !'

மனைவியை 'புருசனதிபதி 'என்று சொல்லலாமா ?
ஹேண்ட் பார் இருப்பதோ கணவரிடம் ...
கைடு லைன் சொல்லிக் கொண்டே ...
ஓட்டுவதோ பின்னால் இருக்கும் மனைவி ...
டூ வீலரை மட்டுமல்ல !

11 June 2016

கணவன் சொன்னா மட்டும் மனைவிக்கு பிடிக்காதது :)


                 ''என் பையன் சொன்னா சந்தோசப் படுற என் மனைவி ,அதையே நான் சொன்னா மட்டும் எரிஞ்சு விழுறா !''
                 ''அப்படியென்ன சொன்னீங்க  ?''
                ''தாயிற் சிறந்த கோவிலுமில்லைன்னு  தான் !''

வாயிலே என்ன கொழுக்கட்டையா  :)
           ''பீரோ புல்லிங் கொள்ளையர்கள்,ஜன்னல் ஓரமா பீரோவை இழுக்கிறதை பார்த்த  ,நீ ஏன் சத்தம் போடலே ?''
             ''ஆயில் புல்லிங் பண்ணிக்கிட்டு இருந்தேங்க !''

பலருக்கும் உண்டு பாட்டன் தந்த 'சொத்து '!
கருவிலே திரு உடையார் ...
இப்போது மிக அரிதாகி விட்டார்கள் !
ஜீனிலேயே சர்க்கரை நோய் உடையார்  
நம் ஊரிலே  பெருகி விட்டார்கள் !

               

10 June 2016

பெண்டாட்டி கிளி மாதிரி இல்லைன்னா :)

 அன்பார்ந்த வலைப் பூ உறவுகளே ...        
            ஜோக்காளி இரு வார சுற்றுலாப் பயணம் செல்வதால் ,இனி ,மினி மீள் பதிவுகள் மட்டுமே வெளியாகும் ,வழக்கம் போல்  ஆதரவு  தர வேண்டுகிறேன்.நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பின்னூட்டப் பதில் தருவேன் ! 

பெண்டாட்டி கிளி மாதிரி இல்லைன்னா  :)
             ''கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒருத்தியை வச்சுக்கிறது தப்புதானே ?''
             ''இதிலே என்ன சந்தேகம் ?''
              ''எனக்கு அமைஞ்சதே குரங்கு மாதிரி ,நான் கிளி மாதிரி ஒருத்தியை வச்சுக்கிறதில் தப்பிருக்கா ?''

ஜெயிக்கப் போறது யாரு :)
          ''மாப்பிள்ளே ,என் பொண்ணுக்கு வாய் கொஞ்சம் நீளம் ,பக்குவமா நடந்துக்குங்க !''
         ''கவலையே படாதீங்க மாமா ,எனக்கும் கை கொஞ்சம் நீளம் !''

கிரிக்கெட்டை விட சியர்ஸ் கேர்ள்களின் டான்ஸ் பெட்டர் :)
கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம் தான் ...
நாட்டுக்காக விளையாட வேண்டியவர்கள்தான் ...
நோட்டுக்காக விளையாட ஆரம்பித்து விட்டார்கள் !

9 June 2016

சினிமா கவர்ச்சி யாரை விட்டது :)

 நமக்கு தேவை பணம்தானே:)          
               ''தலைவரே ,5௦௦ கோடிக்கு ஆசைப் பட்டு  அந்த அணியில் சேர்ந்தோமே ,ஒரு தொகுதியிலேயும் ஜெயிக்க முடியலியே !''
                ''ஜெயிச்ச பிறகு சம்பாதிக்க வேண்டியதை ,ஜெயிக்காமலே சம்பாதிட்டோமேன்னு சந்தோசப் படுங்க !''


ஆறடி நிலமே சொந்தமடா :)            
             ''செத்து போன உங்க வீட்டுக் கோழியைப்  புதைக்கவா , இவ்வளவு பெரிய குழி வெட்டுறீங்க ?''
            ''என்ன செய்றது ,செத்த கோழி உங்க வயிற்றிலே இருக்கே !''

 நகையும் ,லோனும் கொடுத்தா வேண்டாம்னா இருக்கு ?           
         ''நீங்க கேட்ட ஜூவல் லோன் பணத்தை எதுக்கு நகைங்க மேலே வைச்சு தரச்சொல்றீங்க ?''
        ''நீங்கதானே நகைங்க மேலே லோன் தரப்படும்னு சொன்னீங்க ?''

 வெங்காயம் நறுக்கித் தந்த வெறுப்போ :)
      ''ஏன்யா சர்வர் ,சாம்பாரிலே அழுகிப் போன வெங்காயமா கிடக்கு  ,கூப்பிடுய்யா உங்க முதலாளியை !''
      ''கொஞ்சம் பொறுங்க ..வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்கார் !''
சினிமா கவர்ச்சி யாரை விட்டது :)
சினிமாவின் வலிமை அபரிமிதமானது ...
'திரைப் படச் சுருளை தீக்குச்சிகளுக்கு தின்னக் கொடுப்போம் 'என்ற 
கோபக்கார கவிஞனைக் கூட பாடல்  எழுதவைத்து 
தேசிய விருது வாங்கிக் கொடுக்கும் !

8 June 2016

அடுத்தவன் மனைவி பெயரை சொன்னால் வம்புதானே :)

உன் நண்பனைக் காட்டு ,உன்னைப் பற்றி சொல்கிறேன் :)
               ''எனக்கு  நண்பர்கள்  யாரும் இருக்க மாட்டார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது ?''
               ''உங்களோட ஒரு நிமிஷம்  பேசியதில் ,எனக்கே மண்டைக் காய்ந்து ,முடியெல்லாம் கொட்டுதே !''

அடுத்தவன் மனைவி பெயர் சொன்னால் வம்புதானே :)
              ''என்னடா சொல்றே ,பெண்டாட்டி அடிச்சா கூட 'ஐயோ ' ன்னு சொல்லக் கூடாதா ?''
             '' ஆமா ,'ஐயோ 'ங்கிறது  எமனோட  பெண்டாட்டி பெயராம் ..என் பெண்டாட்டி  பெயரை எவண்டா சொன்னதுன்னு  எமன் வந்து நிற்பானாமே!''

கொள்ளைக்காரங்களும் நியூஸ் படிக்கிறது இதுக்குத்தான் :)
           ''என்னடி சொல்றே ,நம்ம வீட்டிலே கொள்ளைப் போனதுக்கு 
என் நண்பர்தான் காரணமா ,எப்படி ?''
           ''ஆமா ,அவர்தானே ...ஒருமாசம் நாம அமெரிக்கா போனதை  
வாழ்த்தி தினசரியிலே விளம்பரம் கொடுத்தது !''

இன்றையப் பெண்களுக்கு பொருந்தும் :)
பெண்ணுக்கு , விரல் நக வெட்டியாய் ...
வெட்கம் !

7 June 2016

நிச்சயம் ,இவர் ' சிலுக்கு ' ரசிகர்தான் :)

 ஏலம் முடிந்தது என்று சொன்னவர் :)            
                ''ஒரு தரம் ,ரெண்டு தரம் ,மூணு தரம் ..எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு கல்லறையிலே எழுதியிருக்காங்களே ஏன் ?''
                ''இறந்தவர், ஏலக்கடை வைத்திருந்தாராமே !''

அப்பன் குணம் அறிந்த பிள்ளைங்க  :)
             ''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்க போலீஸ் திருடன் விளையாடும் போது, ஏன் எறிஞ்சு விழறீங்க ?''
            ''மாசம் பொறந்தா மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா  நாயேன்னு கேட்கிறானே !''

நிச்சயம் ,இவர் ' சிலுக்கு ' ரசிகர்தான் :)
            ''அவர்,தற்கொலை செய்துகொண்ட கவர்ச்சி நடிகையின் தீவிர ரசிகர் போலிருக்கா ,எப்படி ?''
             ''இருக்கும் போது தூக்கத்தைக் கெடுத்தாய் .. தூக்க மாத்திரை  அதிகமாய்  உண்டு துக்கத்தை ஏன் கொடுத்தாய்னு புலம்புறாரே !''

முதல் அழுகை ,தாய்க்கு ஆறுதல் !
பிறந்ததும் சிசு அழுதது ...
தாயின் வலியை உணர்ந்து !

6 June 2016

கல்யாணமானவனின் கை அரித்தால் ,அர்த்தமே வேற:)

 யார் சொன்னது மௌனம் சம்மதமென்று :)          
           '' உன்  மௌனத்தை  காதலுக்கு சம்மதமா எடுத்துக்கலாமான்னு  அந்த பொண்ணுகிட்டே கேட்டது தப்பா போச்சா ,ஏன் ?''
             ''பேசாமலே , அவ கல்யாணப் பத்திரிக்கையை  என் கையிலே கொடுத்துட்டாளே!'' 
நம்பிக்கையான பினாமி :)
                 ''நான் போலீஸ் ஆபீசர் ,பலருக்கும் நீங்கதான் பினாமின்னு கேள்விபட்டேன் ,யார் யார் உங்களிடம் பணத்தைக் கொடுத்து வைத்துள்ளார்கள் ?''
              ''என்னைக் கொன்றாலும் சரி ,அவங்களைப் பற்றி சொல்லவே மாட்டேன் !''
               ''வெரி குட் ,இந்தாங்க ஐந்து கோடி ரூபாய்  ,நான் கேட்கும் போது கொடுத்தா போதும் !''
கல்யாணமானவனின் கை அரிக்குதுன்னா,அர்த்தமே வேற:)
          ''உள்ளங்கை அரிக்குதுன்னு சொன்னா , யார் சொல்றதை நம்புறதுன்னு தெரியலே !''
           ''யார் என்ன சொல்றாங்க ?''
           ''ஜோதிடர் வரவு வரும்னும் ,டாக்டர் வைத்தியச் செலவு வரும்னும் சொல்றாங்களே !.
ஆரோக்கியம் வேப்பங் குச்சி பிரஷ் தான் :)
வேப்பங் குச்சியில் 'டூத் பிரஷ் 'யை கண்டுபிடித்தவன் ...
நோ 'பல் ' பரிசுக்குத்  தகுதியானவனே !

5 June 2016

சோற்றுப் பண்டாரமா ,புருசன்:)

கிடு கிடுவென்பது  மேலா ,கீழா :)
          ''கிடு கிடு என்பதற்கு என்ன அர்த்தம்னே புரியலியா,ஏன் ?''
           ' தங்கம் விலை  'கிடு கிடு 'உயர்வு என்றும் , 'கிடுகிடு 'பள்ளத்தில் விழுந்தது பஸ் என்றும் சொல்றாங்களே !''
எதிலும்  ஒரு மெசேஜ் இருக்கணும்.இதோ .. :)
     '' ஜூலியஸ் சீசர் பிறப்பிலும் இறப்பிலும் ஒரு ஒற்றுமை இருக்கா ,என்னது ?''
    '' அவர்  ஆயுதம் (சிசேரியன் )மூலம் பிறந்தார்  ,ஆயுதம்  (கத்தியால் குத்தப் பட்டு )மூலம்  இறந்தாரே  !''
சோற்றுப்  பண்டாரமா ,புருசன்:)
         ''என்னங்க ,சாப்பிட்டு முடிச்சிட்டீங்களே,மாத்திரை  சாப்பீட்டீங்களா ?''
          ''மறந்தே போகுது,சாப்பாட்டுக்கு  முன்னாடி  சாப்பிடுற மாத்திரைன்னா  மறக்கவே மறக்காது  !''
மாமூல் நூறு வகை :)
    ''நம்ம ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ,மற்றவங்களுக்கு வழிகாட்டியா இருக்காரா ,எப்படி ?''
    ''மாமூல் வரும் நூறு வழிகள்னு புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்காரே !''
நீங்கதான் சொல்லணும் பதிலை :)
தீயின் வேகம் மேலே செல்வது ...
நீரின் வேகம் கீழே செல்வது ...
மனத் 'தீ '  அடையுமோ தாக சாந்தி ?

4 June 2016

முதல் பார்வையில் வந்தால்தான் காதலா :)

 அங்கேயும் இதே தொழில்தானா :)           
             ''கொஞ்ச நாளா ஆளையே காணலையே ,பிச்சை எடுப்பதை விட்டுட்டியா ?''
             ''அக்கினி வெயில் தாங்க முடியலே ,ஊட்டிக்குப்  போயிருந்தேன் !''
எத்தனை அடை சாப்பிட்டாலும் இவன் அறிவுப் பசி அடங்காது :)
            ''அடைக்கு ஆர்டர் பண்ணிட்டு என்னடா யோசிக்கிறே ?''
            ''அடைன்னா ஒண்ணே ஒண்ணுதான் தர்றாங்க ,தொடர்ந்து பெய்ற மழையை ஏன் 'அடை'மழைன்னு சொல்றாங்க ?''
எறும்பு வராத காரணம் என்ன :)                    
         ''அளவுக்கு மீறி ஆசைப்படாத ஒரே ஜீவராசி எறும்பாத்தான் இருக்கும்னு எப்படி சொல்றீங்க ?''
        ''வீ ட்டிலே சீனி சிந்தினாலே எறும்பு வந்திடுது ,ஸ்வீட் கடையிலே எறும்பையே பார்க்க முடியலையே !''
முதல் பார்வையில் வந்தால்தான் காதலா :)
        ''கெமிஸ்ட்ரி லேப்புக்கு வந்தும், அவளையே ஏண்டா சைட் அடிச்சுக்கிட்டே இருக்கே ?''
       ''எனக்கும் அவளுக்கும் 'கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்' ஆகணும்னுதான் !''
தேவைப் பட்டால் கொலையும் செய்வான் :)
மலருக்கு துளியும்  சேதமின்றி 
துளித்துளியாய் தேனை சேர்ப்பது  தேனீ ...
புகை போட்டு அதை விரட்டி தேனை 
புட்டியில் அடைத்து காசு பார்ப்பவன் மனிதன் !

3 June 2016

ம'னை 'வி என்றாலே சந்தேகம்தானா :)

நாணயம் உள்ளவர்கள் வருந்த மாட்டார்கள் :)               
                 ''நாணயங்கள் ஒழிந்ததால்  ,அந்த டாக்டர் வருத்தப் படுகிறாரா ,ஏன்  ?''
                 '' காசை  விழுங்கிட்டான்னு  எந்த கேஸுமே இப்போதெல்லாம் வர்றதில்லையாமே!''
தலைவர் பேச்சில் உள்குத்து தெரியுதே :)
               ''கண்ணகி பரம்பரையில் வந்தவர்கள் நாம்னு தலைவர் அடிக்கடி சொல்றாரே ,ஏன் ?''
                ''தன்னைக் கைது செய்தால் ஊரே எரியும்னு மறைமுகமா சொல்றாரோ ?''
ம'னை 'வி என்றாலே சந்தேகம்தானா :
         " மனைவிக்கு எத்தனை சுழி'ன' போடணும்னு அவர் கிட்டே  கேட்டது தப்பா போச்சா ,ஏன் ! "
         " முதல் மனைவியா,  இரண்டாவது மனைவியான்னு  கேட்கிறாரே  !''
படிக்காவிட்டால் காசு போய்விடும் :)
          ''புத்தகத்திலே  செல்லுபடி தேதின்னு புதுசா போட்டு இருக்காங்களே ,ஏன் ?''
          ''மேஜிக் மாஸ்டர் எழுதிய அந்த புத்தகத்தை  பத்து நாள்லே படிக்கலேன்னா , எழுத்துக்கள் மாயமா மறைங்சுடுமாம் !''
ஆணின் ஆசைக்கும் எல்லை உண்டா ?
தான் விரும்பும் ...
பெண்ணின் மனதில் உள்ளதை படமாய் பார்க்க நினைக்கிறது ...
அவள் கனவினை 'வீடியோ 'வாய்  பார்க்க நினைக்கிறது !

2 June 2016

வயசுப் பொண்ணைக் கடையில் தனியாய் விடலாமா :)

 பதிவர் திரட்டியில்  ,இரண்டாம் இடத்துக்கு  முன்னேற  ஊக்கம் தந்த ,வலையுலக உறவுகளுக்கு  ஜோக்காளியின் மனம் கனிந்த நன்றி !


பதிவர்கள்


 • Rank / User
 • Karma
 • Submissions
 • Published
 • Comments
 1. sukumaran's avatar1

  sukumaran

  1021036.00
  321
  318 (99%)
  0
 2. bagawanjee's avatar2

  bagawanjee

  1010249.00
  171
  155 (90%)
  0மாற்றம் நல்லாவே தெரியுதே :)             
                 ''நம்ம தலைவர் ஆளும் கட்சிக்கு  தாவப் போறார் போலிருக்கா ,ஏன் ?'' 
                ''பெட்ரோல் விலைஏற்றம்னு  சொல்லிக்கிட்டு இருந்தவர் ,விலைமாற்றம்னு  சொல்லத் தொடக்கி விட்டாரே !''
வயசுப் பொண்ணைக் கடையில் தனியாய் விடலாமா :)
            ''நான் பஜாருக்கு போய் சரக்கு வாங்கப் போறேன் ,கடையைப் பார்த்துக்கோன்னு சொன்னா , ஏன் முடியாதுன்னு சொல்றே ?''
           ''நேற்று ஒரு காலிப் பய வந்து லிப் 'லாக் 'கிடைக்குமான்னு கேட்கிறாம்பா !''
பணம் இருந்தால்தான் மனதில் பலம் இருக்குமோ :)
        ''அவர் ,ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த பணம் போனதில் மனநிலை பாதிக்கப் பட்டிருக்காரா ,எப்படி ?''
          ''ஷேர்  ஆட்டோவில்கூட ஏறமாட்டேன்னு  சொல்றாரே  !''
வாத்தியார் ரொம்ப விவரம்தான் :)
              ''நீங்க வாத்தியாரா இருக்கிற பள்ளியில்தான் , மாநிலஅளவில் முதல் இடம் பிடித்த  உங்க பொண்ணும் படிக்குதா ?''
              ''இல்லே ,வேற ஸ்கூல் ! ''
              ''அதானே பார்த்தேன் ,நல்லா  சொல்லித் தர்றதுக்கு உங்க  ஸ்கூல்லே யாரும் இல்லையே !''
தூளி அசைந்தால் தாயின் தூக்கம் ?
தூளியில் தூங்கும் குழந்தை 
தாய்க்கு தந்தது ...
ஒரு துளி தூக்கம் !
பொருத்தமான படம் அமைய உதவிய ...என் .பாண்டியன்  அவர்களுக்கு நன்றி !